25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சுனாமி: ஆய்வாளர்கள் தகவல்

25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சுனாமி: ஆய்வாளர்கள் தகவல்
இந்திய பெருங்கடல் தோன்றுவதற்கு முன்பு பல கடல்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நில அமைப்புகள், புவியியல் மாற்றங்கள், சுனாமி ஆகியவை தொடர்பாக அமெரிக்காவின் மசாசூசட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் ப்ரூக்பீல்டு ஆராய்ச்சி செய்து வருகிறார். ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவியியல், புவி இயற்பியல், புவி தகவலியல் துறைகள் சார்பில் அவரது சிறப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் அவர் தெரிவித்த தகவல்கள்: பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தற்போது இருப்பது போல பல பிரிவுகளாக இல்லை. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டிரயாசிக் காலத்தின் போது லாரேசியா, கோண்ட்வானா என இரு பிரிவுகள் மட்டுமே இருந்தன.
டேதிஸ் கடலால் அவை இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த டேதிஸ் கடலில் இருந்து எழுந்த ஆழிப் பேரலை, குரியுல் கணவாய் பகுதியை பயங்கரமாக தாக்கியுள்ளது. இப்பகுதி தற்போது காஷ்மீரில் இருக்கிறது. டேதிஸ் கடல்தான் பின்னர் பலவிதமாக உருமாறி இந்திய பெருங்கடலாக மாறியது. காஷ்மீரின் குரியுல் பள்ளத்தாக்கு பகுதியில் பல்வேறு விதமான படிமங்கள் கிடைத்துள்ளன. உலகின் பல பகுதிகளை சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி வந்ததற்கான படிம ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்

Post a Comment

Previous Post Next Post